திமுக-வில் செந்தில் பாலாஜி ?

தகுதீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான செந்தில் பாலாஜி, டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். இடைதேர்தலில் கரூர் அரவக்குறிச்சி தொகுதியில் அமமுக சார்பில் அவர் களமிறக்கப்படுவார் என்ற நிலையில் அவர் திமுக-வில் இணையவுள்ளதாகவும், கரூரை சேர்ந்த அமமுக-வின் முன்னணி மாவட்ட நிர்வாகிகள், செயலாளர்கள், தொண்டர்கள் என பலரும் அவருடன் சேர்ந்து இணைவார்கள் என தகவல்கள் வெளியாகின்றன.

வரும் 16ம் தேதி நடைபெறும் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்கும் செந்தில் பாலாஜி மற்ற அமமுக நிர்வாகிகளுடன் திமுக-வில் இணைவார் என்றும், கரூருக்கு மு.க. ஸ்டாலினை வரவழைத்து இணைவு விழாவை அவர் நடத்துவார் என்றும் சொல்லப்பட்டு வருகின்றன.

ஜெயலலிதா ஆட்சி செய்த காலத்தில் மிகுந்த செல்வாக்கோடு இருந்த செந்தில் பாலாஜி, ஜெயலலிதா இறந்த பிறகு தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டார். போதாகுறைக்கு அவர் வகித்து வந்த சட்டமன்ற உறுப்பினர் பதவியும் தகுதிநீக்கம் செய்யப்பட்டது. இதனால் கடந்த சில மாதங்களாகவே செந்தில் பாலாஜி தினகரன் மீது அதிருப்தியில் இருந்ததாக தெரிகிறது.
குறிப்பாக ஜெயலலிதா இரண்டாம் ஆண்டு நினைவு ஊர்வலம் உள்ளிட்ட அமமுக-வின் சமீபத்திய முக்கிய நிகழ்வுகள் எதிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. இதனால் அவர் திமுக-வில் இணைய பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்பட்டு வருகிறது. இதை மறுக்கும் வகையில் செந்தில் பாலாஜி எந்த அறிக்கையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமமுக-வின் புகழேந்தி, நாடாளுமன்ற தேர்தலில் குழப்பம் உருவாக்க வேண்டும் என்பதற்காகவே ஓபிஎஸ் மற்று இபிஎஸ் இணைந்து இதுபோன்ற அமமுக குறித்து தவறான தகவல்களை பரவவிட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்