டோக்கன் சிஸ்டம் தினகரன் பாணியில் அழகிரி

தி.மு.க. தலைவர் கலைஞர் மறைவுக்கு பிறகு தி.மு.க.வில் முக்கிய பொறுப்பு கேட்டு முன்னாள் மத்திய மந்திரியும், தென் மண்டல தி.மு.க. அமைப்புச் செயலாளருமான மு.க. அழகிரி திடீர் போர்க்கொடி தூக்கி வருகிறார். ஆவேசமாக அழகிரியும் அவரது மகன் தயாநிதியும் குபீர் பேட்டிகளை தொடர்ந்து அளித்து வருகிறார்கள்.

செல்லூர் ராஜு, உதயகுமார் போன்ற ஒருசில அதிமுகவினர் மட்டுமே அழகிரியை கண்டுகொள்ள, திமுகவினரோ, பிற கட்சியினரோ அழகிரியை கண்டு கொள்ளவில்லை.
தனது பலத்தை உணர்த்தும் வகையில் வருகிற 5-ந் தேதி சென்னை திருவல்லிக் கேணியில் இருந்து கருணாநிதி நினைவிடம் நோக்கி மு.க. அழகிரி ஆதரவாளர்களுடன் அமைதி பேரணி செல்கிறார். இதில் சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்களிடம் மு.க. அழகிரி ஆதரவு திரட்டி வருகிறார்.
மேலும் மு.க. ஸ்டாலின் அதிருப்தியாளர்களையும் தன் பக்கம் இழுக்கும் முயற்சியிலும் மு.க. அழகிரி ஈடுபட்டுள்ளார்.
அமைதி பேரணியை வெற்றிகரமாக நடத்துவது குறித்து மு.க. அழகிரி மதுரை சத்தியசாய் நகரில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், வருகிற 5-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ள அமைதி பேரணிக்கு அனைவரும் திரண்டு வரவேண்டும். இதில் பங்கேற்பவர்கள் கருப்பு சட்டை அணிந்து வரவேண்டும், பேரணி மிக அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்றார்.

பின்னர் நிர்வாகிகளிடம் ஒவ்வொருவரும் எத்தனை பேரை அமைதி பேரணிக்கு அழைத்து வருகிறீர்கள், கூட்டத்தை எவ்வாறு கூட்டலாம் என்று கேட்க, அனைவரும் தினகரன் பாணியில் குக்கர் அல்லது டோக்கன் முறையை பின்பற்றலாம் என்று கூற அதற்கான செயல்திட்டத்தை பற்றி ஆலோசித்து இருக்கிறார்கள்