வார்த்தை தவற மாட்டான் இந்த கோட்டைசாமி

வார்த்தை தவற மாட்டான் இந்த கோட்டைசாமி

நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று மூன்றாண்டுகளுக்கு முன்னால் வாக்குறுதி கொடுத்ததால் வருகிறேன் என்று தனது சூப்பர் ஸ்டார் இமேஜைக் காப்பாற்ற வேறு வழியின்றி அரசியலுக்கு வந்து விட்டார் ரஜினி?.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா

ரஜினியை பாஜகவுக்கு இணையாக தூக்கி பிடித்து அவர்களுக்கு இணையான அவமானங்களை சந்தித்த தமிழருவி மணியனுக்கு துணை நடிகர் வேடத்தைக் கொடுத்துவிட்டு, பாஜகவில் இருந்து அழைத்து வரப்பட்ட (அனுப்பி வைக்கப்பட்ட) அர்ஜூன மூர்த்திக்கு முக்கிய வேடத்தை வழங்கியிருக்கிறார் ரஜினி.

அவரை ‘வாராது வந்த மாமணி’ போல என்று சொல்லி ரஜினி பூரித்ததை பார்த்த போது டாக்டர் ராமதாஸ் அன்புமணியை அறிமுகபடுத்திய காட்சி ஞாபகத்துக்கு வருகிறது. (இவரை (அன்புமணியை) ஏன் இவ்வளவு நாள் ஒளித்து வைத்திருந்தீர்கள் என்று ராமதாஸிடம் எல்லோரும் கேட்டார்களாம். அவரை ராமதாஸ் ஒளித்தே வைத்திருக்கலாம் என்று இப்போ கேட்டால் சொல்வார்கள்).

ஒரு படம் ஓடாட்டி, அடுத்த படத்தை வெற்றி படமாக்கிடலாம், ஆனால் தேர்தலில் தோற்றால் இவ்வளவு நாள் சேர்த்து வைத்த இமேஜ் காலி, அதனால் தான் தோற்றால் “அது மக்களின் தோல்வி” என்று இப்போதே முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக ஒரு பிட்டை போட்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார்.

ரஜினியின் லட்சியப் படமான “ராகவேந்திரர்” திரைப்படத்திற்கு பிறகு ரஜினி குருமூர்த்தி பிலிம்ஸ் வழங்கும் “ஆன்மீக அரசியல்” படம் தமிழக மக்களிடம் அதே வரவேற்பை பெறுமா அல்லது வெற்றி பெறுமா என்பது போக போக தெரியும்.

political