ரஜினி, இன்னொரு தினகரன் ?

ரஜினி, இன்னொரு தினகரன் ?

எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவால் முதல்வராகி, பின்பு அதே சசிகலாவை பிஜேபி துணையுடன் ஜெயிலுக்கு அனுப்பி, தினகரனை விலக்கி வைத்ததில் இருந்து தினகரன் மீடியாக்களின் செல்லப் பிள்ளையானார்.

தினகரன் செல்லுமிடமெல்லாம் மக்கள் வெள்ளம், ஸ்லீப்பர் செல், எம்எல்ஏக்கள் ஆதரவு என்று பணத்தால் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்த தினகரன் 2019 பாராளுமன்ற தேர்தலில் மிகப் பெரிய வெற்றி பெறுவார், அதிமுக தினகரன் பக்கம் போகும் என்றெல்லாம் ஆருடம் சொன்ன அறிவுஜீவி பத்திரிக்கையாளர்கள், அம்மா இட்லி சாப்பிட்டதை சொன்ன கட்சிக்காரர்கள் எல்லாம் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தினகரனுக்கு மங்கலம் பாடி விட்டார்கள்.
ஊதி ஊதி பெரிதாக்க பட்ட தினகரன் என்ற பலூன் உடைக்கப்பட்டது.
கிட்டத்தட்ட ரஜினியும் இதே நிலையில் தான் இப்போது இருக்கிறார், என்ன வித்தியாசம் என்றால் ரஜினிக்கு இந்த உண்மை நிலை தெரியும் என்பது தான்.
தினகரனின் ஆர்.கே.நகர் வெற்றியும், 1996 தேர்தலில் ரஜினி கொடுத்த வாய்ஸீம் சற்றேறக்குறைய ஒன்றே. 1996 தேர்தலில் திமுகவுக்கு குரல் கொடுத்ததால் திமுகவை விட ரஜினியின் பலூன் தான் பெரிதாக்கப்பட்டது.
அதன் பின் நடந்த தேர்தல்களில் ரஜினியின் வாய்ஸால் உபயோகமில்லாமல் போனது உலகறிந்தது. ஆனால் திரைப்படங்களின் வெற்றியால் பலூன் பாதுகாக்கப்பட்டது.
சந்திரமுகி படத்திற்கு பின் ரஜினியின் சினிமா கேரியர் கீழே போக ஆரம்பித்தது, விஜய், ரஜினி பாணியில் ரஜினியை பின்தள்ளி விட்டு மிகவேகமாக முன்னோக்கி பாய்ந்து கொண்டிருந்தார். ரஜினி தான் வயதான ரேஸ் குதிரை என்பதை உணர்ந்து கொண்டு அதை மேடையில் வெளிப்படுத்தவும் செய்தார்.
சிவாஜி, எந்திரன் என்ற சங்கர் படங்களின் வசூலில் ரஜினி பெருமை கொள்வதற்கு ஒன்றுமில்லை. காலா, கபாலி, பேட்ட போன்ற படங்கள் வசூலுக்கு சிரமப்பட விஜய் தொடர்ச்சியாக 300 கோடி வசூல் படங்களை கொடுத்து வந்தார்.
தனது படங்கள் வெளிவரும் போதெல்லாம் அரசியல் பேசிய ரஜினி, கலைஞர், ஜெயலலிதா இல்லை அதனால் நான் அரசியலுக்கு வருகிறேன் என்று 2017ல் சொல்லி விட்டு, அதன் பின் அவசரப்பட்டு சொல்லிட்டோமோ என்று மூன்றாண்டுகள் அமைதியாகி விட்டார். மீடியாக்கள் விடாமல் பலூனில் காற்று அடிக்க, சிறிய இடைவேளைக்கு பிறகு ரஜினியே ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், நான் வந்து ஒன்றும் ஆகப் போவதில்லை, சிறிது ஓட்டுக்களைத் தான் பிரிப்பேன் எனவே மக்கள் புரட்சி வேண்டும் என்று எஸ்கேப் ஆனார்.
அதன் பின்னரும் பலூன் பாதுகாக்க பட்டது. மீண்டும் வெளிவந்து கட்சி தொடங்குவேன் என்று கூவியிருக்கிறார் ரஜினி. ரஜினி ஒரு வேளை நிஜமாகவே சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டால் தான் தெரியும் பலூன் எவ்வளவு பெரியதென்று.
political