டார்கெட் 100 தொகுதி கமல்

டார்கெட் 100 தொகுதி கமல்

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சி’ என்ற எந்த தடுமாற்றமும் இல்லாமல் கமல் மூன்று கட்டப் பிரச்சாரத்தை, பெரும் வரவேற்புக்கிடையே, வெற்றிகரமாக முடித்து அனைத்து கட்சிகளுக்கும் குறிப்பாக திமுகவுக்கு, ஒரு பயத்தை உண்டாக்கி யிருக்கிறார்.

ஆளும் கட்சியான அதிமுகவும், எதிர்கட்சியான திமுகவும் அவசர அவசரமாக பிரச்சாரத்தில் இறங்க வேண்டிய நிலை. எம்.ஜி.ஆர் வாரிசு, அமைச்சர்கள் ஊழல், லஞ்சப்பட்டியல் என்று கமல் அடுத்தடுத்து எடுக்கும் ஆயுதங்களுக்கு பதில் சொல்ல அதிமுக திணறி வரும் நிலையில், ஸ்டாலின் பேச்சுகள் அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெறத்தவறுகிறது.

காக்கை உக்கார விழுந்த பனம்பழம்’ போன்ற 2019 பாராளுமன்ற தேர்தல் வெற்றி தற்போது சாத்தியமில்லை என்பதை உணர்ந்தே இருக்கும் திமுக, உதயநிதி மூலம் கமலிடம் பேசிப் பார்த்ததுடன், அந்த தகவலையும் வெளியே கசியவிட்டது.

நேரடியாக கண்ட கள நிலவரம், ரஜினியின் அந்தர் பல்டி போன்ற காரணங்களால், நூறு தொகுதிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், மூன்றாவது பெரிய கட்சியாக 40 முதல் 50 தொகுதிகளில் வெற்றி பெறவும் முடியும் என்று நம்புகிறது மக்கள் நீதி மையம். 

இந்த சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்பதை அனைத்து கட்சிகளையும் போல் கமலும் உணர்ந்திருக்கிறார். ரஜினியின் மூன்றாண்டு அரசியல் சடுகுடு விளையாட்டால், சொன்னதை செய்வார் கமல் என்ற​ இமேஜ் மக்கள் மத்தியில் உண்டாகியிருக்கிறது.

ஆளும் கட்சி என்ற அதிகாரத்தில் சுற்றி வரும் எடப்பாடியை முதலமைச்சராக கூட்டணி கட்சியினரும், ஏன் அவரின் சொந்த கட்சியிலேயே யாரும் ஏற்க தயாராக இல்லை. ஆமைக்கறி சீமான் சொன்னது போல அதிமுக கிட்டத்தட்ட போட்டியிலேயே இல்லை

திமுகவை தவிர்த்து அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் மற்றும் விசிக போன்ற கட்சிகளுக்கு, பெரிய வாக்கு வங்கியோ, எதிர்பார்ப்போ மக்களிடம் இல்லை.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, விருதுநகர், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் கணிசமான தொகுதியை கைப்பற்ற மக்கள் நீதி மையம் திட்டமிட்டுள்ளது.

பிற மாவட்டங்களில் திமுக மற்றும் அதிமுகவை தவிர்த்து கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை டார்கெட் செய்யவும் கமல் திட்டம்.

மேலும் நேரடியாக அரசியலில் ஈடுபடாத, ஆனால் மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்களை தேர்தல் களத்தில் நிறுத்தும் கமலின் திட்டம், ஒரு பாஸிட்டிவ் அலையை தமிழகத்தில் ஏற்படுத்தும் என்று மக்கள் நீதி மையம் நம்புகிறது.

மக்கள் யார் பக்கம், எதிர்பாராததை எதிர்பார்ப்போம்.

Latest Trending News